Friday, 5 August 2011

பின்னோட்டம்


முன்குறிப்பு : அதை பின்குறிப்பில் சொல்கிறேன்.

       சில விசயங்களை, சொல்பவரின் நாவன்மையில் மயங்கி, அடிப்படை என்னவெனச் சிந்திக்கக் கூட தோன்றாமல் அப்படியே பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.( சில சமயம் சொன்னவர் கூட தன் கருத்தை மாற்றியிருப்பார்.) கேட்பதோடு நிறுத்தி விடாது, அதன் அடிப்படையைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. அப்படித் தோன்றியதால் சிறிதாக பின்னோக்கிய ஒரு கண்ணோட்டம். என்னால் முடிந்த அளவிற்கு சுருக்கி எழுதியுள்ளேன். ( ரொம்ப விரிவா எழுதினாலும் படிக்கச் சிரமம்.)

நம் இலக்கியத்தில் ஐவகை நிலங்களாக குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏதோ நம் சமூகத்தினை மட்டும் சார்ந்தது என்று சுருங்கிக் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு பரிணாமப் பாடம் தான். அதாவது, மனிதனுக்குச் சற்று முன்னிருந்து ஆரம்பிக்கிறது. மனிதன் என்பவன் குரங்கின் பரிணாம வளர்ச்சி என்பதை ஏறத்தாழ எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
                           இப்பொழுது, ஆரம்பத்திற்கு வருவோம். இன்றும் குரங்கு அதிகமாக இருப்பது மரங்கள் அடர்ந்துள்ள மலைகளில் தான். அது தான்  ”குறிஞ்சி”.

குறிஞ்சி:
         மலையும், மலையைச் சார்ந்த நிலமும் குறிஞ்சி யென்று அழைக்கிறோம். இதில் வாழ்ந்த மக்களின்
உணவுகள்: தேனும், தினையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்: வேட்டையாடுதல்.
கடவுள்(தலைவன்): முருகன்.(குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்)
முருகனின் படத்தினைப் பார்த்திருப்போம். அவரது ஒரு கையில் வேல் இன்னொரு கையில் சேவற்கொடியும், அதனடியில் ஒரு பாம்பும் இருக்கும். அவரது வாகனமாக மயில். இதன் பின்புலத்தினைச் சற்று கவனியுங்கள். விலங்குகளை வேட்டையாட, வேல் பயன்படுகிறது. மலைவாழ் மக்கள் நேரடியாக வரும் எத்துனை கொடிய விலங்கையும், எதிர்த்துப் போராடவும், அல்லது அவற்றிலிருந்து தப்பித்து தன்னைக் காத்துக் கொள்ளவும் தேர்ந்தவர்கள் தான். ஆனால் அவர்களின் பேரச்சம் என்பது, பாம்பு பூரான் போன்ற ஊர்வன மீது தான். ஊர்வனவற்றில் இருந்து தம்மை பெரிதும் காக்கவல்ல பறவை இனங்களான மயில், சேவல்(வானில் பறக்கும் வழக்கமற்றவை) போன்றவற்றின் மீது தனிப் பிரியம் கொண்டனர். அந்தச் சமூகத்தின் தலைவனையும், காக்கும் பிறவுயிரினத்தையும் மதிக்கும் வழக்கம், நாளிடைவில் வணக்கத்திற்குரிய பொருளாகி விட்டன.

முல்லை:
காடும் காட்டினைச் சார்ந்த நிலமும் முல்லை யெனப்படுகிறது.
தொழில் : ஆநிரை மேய்த்தல் (கால்நடை வளர்ப்பு).
கடவுள்(தலைவன்): கண்ணன்,கிருட்டிணன். கையில் புல்லாங்குழல், தலையில் மயிலிறகு.
 வேட்டையாடிய மனிதன் விலங்கினை விரட்டியபடி மலையை விட்டு அடிவாரம் அடைகிறான்(வேட்டையாட வசதியான ஆடு, மாடு, மான் போன்றவை அதிகம் வசிக்குமிடம்). தன் தேவை போக, மீதமுள்ள விலங்குகளை அடுத்த வேளைத் தேவைக்காகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.(கவனிக்கவும், மானினங்களை அவன் கட்டுப்பாட்டில் வைக்க இயலவில்லை.) பின் காலப்போக்கில் அவை பல்கிப் பெருகி, அவற்றின் மூலம் கிடைக்கும் உணவுப் பொருளுக்காக மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டான். கையில் இருக்கும் புல்லாங்குழல் காடுகளில் கிடைக்கும் வண்டுகள் துழைத்த மூங்கிலின் மூலம் ஒலி எழுப்பி கால்நடைகளுக்கு சமிக்க்ஷை பழக்கினான்.  தலையிலிருக்கும் மயிலிறகு, தன் மூதாதையர்களின் நன்றி நவிலும் வழக்கமாகக் கொண்டான்.

மருதம்:
       வயலும் வயலைச் சார்ந்த நிலங்களும் மருத நிலமாகும்.
தொழில் : உழவு.
கடவுள்(தலைவன்) : வருணன் மற்றும் இந்திரன்.
       கால்நடைகள் தண்ணீர் குடிக்க ஆற்றிற்கு வழிநடத்திய மனிதன், காட்டாற்று வெள்ளத்தின் வேகம் தணிந்த பகுதிக்கு மெல்ல பெயற்சி அடையத் தொடங்கினான். அங்கேயே தங்கிவிட சில காரணங்கள்,  ஆற்றின் வேகம் குறைந்ததால், உயிர்ப்பயம் குறைந்து நீர் அருந்த இலகுவாயிருந்தது, கால்நடைகளுக்கான பசும் புற்கள் அதிகம் கிடைத்தது. சில உண்ணத்தக்க தானிய வகைகளைக் கண்டான். பிரிந்து செல்லும் நதிகளின் இடையே உழவு தொழில் மேற்கொண்டான். 
விவசாயத்திற்குதவும் மழை(வருணன்)யும், உழவில் பெரும்பொருள் ஈட்டியவன்(திறமை மிக்கவன்) தலைவன் (இந்திரன்) என்றும் கொண்டாடப் பட்டான். இந்திரன் பெரும் பணக்காரன். நீண்ட நாட்களுக்குத் தேவையான உணவு கையிருப்பு நிலை வந்ததும் மற்ற பொழுது போக்கு களியாட்டங்களின் மீது மனிதனுக்கு நாட்டம் மிகுந்தது. கலை பிறந்தது. ஆற்றங்கரை நாகரீகம் தோன்றின.

நெய்தல்:
         கடலும், கடலைச் சார்ந்த நிலமும் நெய்தல் ஆகும்.
உணவு: மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள்.
தொழில்: மீன் பிடித்தல்.
கடவுள்(தலைவன்) : திருமால்(பாற்கடலில் பள்ளி கொண்டவர்). கையிலிருக்கும் ஆயுதம். சங்கு, சக்கரம்(பூமராங்).
 ஆற்று மீனின் ருசி கண்ட ஒரு குழு, மெல்ல அதன் போக்கிலேயே சென்று கடலை அடைந்தனர்.
மற்ற இடங்களை விட, கடற்கரையில் ஒலி ஊடுருவும் திறன் குறைவு, அதனால் தான் கடலில் கிடைக்கும் சங்கை பயன்படுத்தி சமிக்ஷைக்கு பயன்படுத்தினர்.

பாலை:
       மிக முக்கியமான நிலம் இது. பாலையென்றொரு நிலம் தனியாகக் கிடையாது. மேற்சொன்ன நால்வகை நிலத்தில் எதில் வறட்சியும், வருமையும் தாண்டவமாடுகிறதோ, அது பாலை நிலம்(நிலங்கள்) ஆகக் கொள்ளப்படுகிறது.
கடவுள் : காளி. ஆயுதங்கள் : வேல், போன்ற கொடிய ஆயுதங்கள்.
தொழில்: களவாடுதல். (வழிப்பறி).
       இயற்கையான தொழில் மூலம் பொருளீட்ட இயலாத சூழ்நிலையில் ஒரு கூட்டமாகச் சென்று பிறரிடம் வழிப்பறி போன்றவற்றை செய்து வந்தனர். அதற்குத் தான் அத்தகய கொடிய ஆயுதங்கள்.
இங்கே ஒரு சந்தேகம் எழலாம். இங்கே காளி என்ற பெண் தெய்வம் எப்படி வந்தது? அத்தனை நிலத்திலும், ஆண் கடவுளாக இருக்கும் போது, இங்கே மட்டும் எப்படி பெண் தெய்வம்?
வழிப்பறி மற்றும் கொள்ளையில், ஆட்களின் எண்ணிக்கையும் ஒரு பலம் தான். ஆயுதங்களையும், கொள்ளையடித்தப் பொருட்களையும் ஓரிடத்தில் பாதுகாக்க ஓர் ஆண் பலத்தை இழக்கத் துணியாது, ஒரு பெண்ணை நியமித்தார்கள். அவரே பிற்காலத்தில் தலைவி( கடவுள்) ஆகிவிட்டார்.

       இதன் மூலம் நாம், நம் முன்னோர்கள் திறமையில் மேம்பட்டவர்களையும், மற்றும் வாழ உதவியவற்றிற்கு நன்றி நவிலும் நோக்கிலும் தான் அதனை வணங்கினர்.

       பிற்காலத்தில் கூட, தன் வயல்களைக் காத்து நின்ற காவலர்களான கருப்பன், முனியன், குப்பன் மற்றும் அய்யனார்(ஐயன்+ மரியாதை நிமித்தமாக ஆர்.) போன்றவர்களையும் நன்றி நவிலும் காரணமாக சாமிகளாகக் கொண்டாடியவ்ர்கள் தான் நம் முன்னோர்கள். இன்றும் குல தெய்வ வழிபாடாக வருடத்திற்கொரு முறை வழிபடும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது.

       முன்னோர்களின் இவ்வழக்கம் நம் மரபணுக்கள் மூலம் இன்றும் நம்மிடையே தொடர்ந்து வருகிறது.( “அம்மா” வை, ”மா” என்ற ஒலியில் தான் எல்லா மொழிகளிலும் அழைக்கப்படுவது, மரபணு தொடர்ச்சிக்கு ஒரு சான்று) இறை வழிபாடு என்பது சமூகத்தின் வழக்கத் தொடர்ச்சி. அதைத் தனிப்பட்ட மனிதர் ஒருவரால் மாற்ற நினைப்பது வேடிக்கையான ஒன்று. இது வரை முழுமையான விடை தெரியாத சில விசயங்களை, நம்பிக்கை என்ற பெயரில் தான் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஒருவரின் நம்பிக்கை, நம் நம்பிக்கையிலிருந்தோ சிந்தனையிலிருந்தோ மாறுபட்டால், அவர்களை முட்டாள்கள் என்று அழைப்பது அதைவிட பெரிய தவறு. சமூகம் மூடநம்பிக்கையினால் சீரழிகிறது என்று வருத்தப்படும் அன்பர்கள், மூட நம்பிக்கையின் மூலம்(காரணம்) என்னவென்று சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள்.( ஏனெனில் நாம் தானே பகுத்தறிவாளர்கள்) பகுத்து ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிந்து பிறருக்குத் தெளிவுபடுத்த வேண்டிய நாம், எதுவுமே விளக்கமளிக்காமல் ”முட்டாள்” என்று விளிக்கத் தகுதியற்றவர்களே!

பின்குறிப்பு : மேலேயுள்ள கட்டுரை(!!!???)யின் நோக்கம், உணர்ச்சிப் பெருக்காக பேசுகிறோம் என்ற பெயரில், அடுத்தவரின் நம்பிக்கையைச் சிதைக்காதீர்கள். தன்னை அறிவுஜீவி என முன்னிருத்திக் கொள்ள, பிறரை முட்டாள் என்று இகழாதீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கைக் குறைபாடை மட்டுமே வெளிக்காட்டுகிறது.

தத்துவம்

”இல்லாதவர்கள் சமத்துவம் பேசுகிறார்கள்- கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில்.
இருப்பவர்கள் முதலாளித்துவம் பேசுகிறார்கள்- கொடுக்கவேண்டுமே என்ற பயத்தில்.”

”ஃபேஸ் புக்”


”ஆற்றுப்படுத்து”தலின் நவீனத்துவம் தான் ”ஃபேஸ்புக்”கோ? -இங்கே
புலவர்களே புரவலர்களாகவும்,
புரவலர்களே புலவர்களாகவும்…
கொடுத்த பொருளும், எடுத்த பொருளும்
பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.
அர்த்த கவளம் சிந்துகின்ற யானைகளும் உண்டு.
கருத்து அயிரையிடம் சிக்கிய பெருத்த திமிங்கலங்களும் உண்டு.
புதுப்புனலில் புரண்டு வரும் புயகம் போல,
பொய் புகற்கும் புஞ்சலிகளும், அவர்ப் புதல்வர்களும் கொஞ்சம் உண்டு.
சிலேடைகளும் உண்டு, கொஞ்சம் சேட்டைகளும் உண்டு.
முகநக நட்பது குறைவு, அகநக நட்பே அதிகம்.

அட…!
எங்க காலத்திலேயும் – ஒரு
சங்க காலம்!

Tuesday, 7 June 2011

பயனப் படிக்கட்டுகள்


சிற்சில ஊடல்கள் தவிர்த்துப் பார்த்தால், நான் ஆசிர்வதிக்கப்பட்ட கணவனாகவே இருக்கிறேன். நிஜம் சொல்ல வேண்டுமானால் காதலைத் தவிர வேறொன்றும் அவளுக்கு கொடுத்ததில்லை. அவளும் கேட்டதில்லை.
ஆனால் அவள் கொடுத்ததோ அளப்பரியது.

நான் அன்னையிழந்து நின்றபோது வந்து  நிரப்பினாள். இன்றுவரை அவள் ஏற்ற, அவ்விரு இடத்திலும் சிறு குறையுமின்றி முழுதாய் நிறைந்திருக்கிறாள்.

காலத்துடன் கலந்தே... காதலுடன் கரைந்தே, கலவிக் கொண்டிருக்கிறோம் எங்கள் வாழ்க்கையை...

நாளை " பதினைந்தாம் அகவையில்" அன்புமாறாமல் அடியெடுத்து வைக்கிறோம்.

Monday, 30 May 2011

உண(ர்)வு


ஒரு கவிஞனால்
மட்டும் எப்படி
அடுத்தவரின்
கருவைப்
பிரசவிக்க முடிகிறது?



Tuesday, 24 May 2011

திரையில் பார்த்ததில் அவ்வளவு நிறைவு இல்லை சகோ! நல்ல முயற்சி என்று சொல்லலாம். சுசீயின் 'வெண்ணிலா க.குழு வில் இருந்த எதார்த்தம் இதில் இல்லை. பா.சக்தியின் எழுத்தில் இருந்த இயல்பும் இதில் இல்லை.

 பெரிய வருத்தம் என்னவெனில் படத்திற்கு உழைத்தவர்கள் எல்லாம்  கதைக் களத்தின் மைந்தர்கள்.நிறைய சறுக்கல்கள். முதலில்  " அப்புக் குட்டி"யின் தேர்வே தவறு. தேனிக்காரரே! நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், அகமலையில் எந்த மனிதருக்காவது "தொப்பை" இருக்கா? இல்லை இருக்கத்தான் முடியுமா? அதுவும் குதிரையை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் ஒரு மனிதருக்கு..?
 சரி கதை 1982 ல் நடக்க வேண்டிய அவசியம் என்ன? 82 ல் அகமலை அப்படித்தான் இருந்ததா? ஊரே தூக்கி கொண்டாடும் குதிரைக்கு, கொல்லும் தண்ணியும் வைக்க ஆளில்லையா? அதற்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தான் கட்டிப் போடுவார்களா?

தாழ்த்தப் பட்டவர் பூசாரியா?  அப்படி இருந்தாலும் அப்படி இருக்கும் போது சாதிப் பிரச்சினை எப்படி வரும்?

எல்லாத்தையும் விட பெரிய கூத்து... குதிரை தானாகவே போயி சன்டை போடுவது...இது போன்ற இன்னும் சில குறைகளைத் தாண்டி எம் மண்ணின் வழக்கு நடையும் நையாண்டியும் அங்கங்கே கொஞ்சம் ஈரமும் மனதிற்கு இதமாகத் தான் இருந்தது. தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவு இல்லை சகோ! மண்ணிக்கவும்.

பின் குறிப்பு: தேனி ஈஸ்வர், பாஸ்கர் சக்தி இருவரும் எனக்கு நெருங்கிய நன்பர்கள். நன்பர்களின் படம் என்பதற்காக சூப்பர்,சூப்பர் என்று சொல்லுவதே திரைத் துறைக்கு ஒரு சாபமாக இருக்கிறது.

இப்படிக்கு " ஒரு சாமானிய ரசிகன்"




Friday, 20 May 2011

காக்க...காக்க…


ராமர் மசூதியோ,
பாபர் கோவிலோ,
இருந்துவிட்டு போகட்டும்...
முதலில்
சுத்தப்படுத்துங்கள்.
அந்த "புனிதத்தல"த்தையும்
தான்.